மக்களாட்சியை கண்டிராத மக்கள் வாழும் நாடுகளில், மக்களாட்சிக்குள் எப்படியாவது வந்துவிட வேண்டும் என்ற அவா மேலோங்கி மிகப்பெரிய மக்கள் போராட்டங்களுக்குப்பின் மக்களாட்சி யின் கூரான தேர்தல் அரசியலுக்குள் வந்து, புதுப்புது தலை வர்களை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருந்த வரலாற்றை கடந்த நான்கு பத்தாண்டுகளில் மானுடம் கண்டுள்ளது. இதன் விளைவு இன்று ஏறத்தாழ 80 சதவீத மக்கள் உலகில் மக்களாட்சியின் குடையின்கீழ் வந்து விட்டனர். இருந்தபோதிலும் மக்களாட்சி என்பது உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக நடைபெற்று வருவதாக நாம் எண்ணக்கூடாது. அந்தந்த நாட்டில் நிலவும் மக்களாட்சி பற்றிய புரிதலுக்கு ஏற்ப மக்களாட்சி நடைபெற்று வருகின்றது என்பதுதான் எதார்த்தமான உண்மை. மக்களாட்சி என்ற ஆட்சிமுறை கிரேக்கத்திலும், ரோமிலும் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் துவங்கிய நாளிலிருந்து இன்று வரை, எந்த நாடும், எந்த சமுதாயமும், எந்த நிறுவனமும் மக்களாட்சிக் கோட்பாட்டில் வரையறை செய்யப்பட்ட அடிப்படை அம்சங்களை முற்றிலும் கடைப்பிடித்து மக்களாட்சியின் உச்சத்தை எட்டியதாக நாம் கூற இயலாது. மக்களாட்சிக்கான வரையறை மற்றும் விளக்கம் எல்லாம் மக்களாட்சி தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை விரிவடைந்து கொண்டே வருவதை மக்களாட்சி வரலாறு நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது. இதில் மக்களாட்சி வரலாற்றை ஆய்வு செய்து பார்த்தால் ஒரு முக்கியக் கூறான ஜனநாய கப்படுத்துதல் என்ற செயல்பாடு எல்லாக் காலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தபோதும் மக்களாட்சி தொடர்ந்து மெருகேறி அதன் உச்சத்தை நோக்கிச் செல்வதாக நாம் கூறிவிட முடியாது. எப்படி பொருளாதாரம் உயர்வதும் தாழ்வதுமாக இருந்து கொண்டிருக்கிறதோ, அதேபோல் மக்களாட்சியும் பல சருக்கல்களைச் சந்தித்துள்ளது உலக நாடுகளில். மக்களாட்சியின் பிறப்பிடமாக பேசப்படும் நாடுகளில் கூட மக்களாட்சி தாழ்நிலைக்குச் சென்ற வரலாறும் இருக் கின்றது. மக்களாட்சிக்கான விரிவாக்கச் செயல்பாடுகள் தொடர்ந்து நடந்தபோதும், பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சிக்கு எதிர்மறைக் காரணிகளும் செயல்பட்டு மக்களாட்சி விரிவடையாமல் தடுக்கப்பட்டு வருகின்றன என்பதையும் உலகத்தில் நாம் பார்த்து வருகின்றோம். மக்களாட்சி வளர்ந்த வரலாற்றை புரட்டும்போது முதல் அலை வீசத் தொடங்கியது கி.மு.ஆறாம் நூற்றாண்டில். மக்க ளாட்சிக்கான இரண்டாம் அலை வீசத் தொடங்கியது வட இத்தாலிய நகர் மன்ற அரசுகளில் பத்து மற்றும் 11ஆம் நூற்றாண்டில்தான். மூன்றாம் நிலையில்தான் புது வரை யறைகளோடு பெரிய இயக்கமாக உருவானது 18ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிலும் பிரான்ஸ் தேசத்திலும். இந்த இரண்டு நாடுகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அரசாங்கத்தை உருவாக்கினாலும், அதைவிட மிக முக்கியமாக அரசாங்கத்தை ஜனநாயகப் படுத்தி மக்களாட்சிக் கூறுகளை உள்வாங்கி அரசாங்க அமைப்புக்களை செயல்பட வைத்துவிட்டனர். அதுதான் மிகப்பெரிய சாதனை. அடுத்த நிலையில் முதல் உலகப்போருக்குப்பின் ஐரோப்பிய நாடுகளில் மக்களாட்சி வியாபிக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு பனிரெண்டு நாடுகள் மட்டுமே மக்களாட்சிக் கட்டமைப்புக்குள் வந்தன. அங்கு துவங்கி 1970 வரை 36 நாடுகள் மட்டுமே மக்களாட்சிக்குள் நுழைந்தன. மிக முக்கியமாக அரசாங்கத்தை ஜனநாயகப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தப்பட்டன. எனவேதான் ஐரோப்பிய நாடுகளில் அரசாங்கச் செயல்பாடுகளில் பெரும்பாலான மக்களாட்சிக் கூறுகளை காண முடிகின்றது. ஆனால் இரண்டாவது உலகப்போருக்குப்பின் ஒன்றன்பின் ஒன்றாக காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரம் அடைந்த நாடுகளும் சரி, அதனைத் தொடர்ந்து சமீப காலங்களில் மக்களாட்சிக்குள் நுழைந்த நாடுகளிலும் சரி மக்களாட்சியை அரசாங்கத்திற்குள் நடைமுறைப்படுத்தவே போராட வேண்டியுள்ளது என்பதுதான் எதார்த்தமான உண்மை. இதில் இந்தியாவும் விதி விலக்கல்ல.
விரிவாக்கத்துக்கு தடை
மக்களாட்சியின் பரிணாமங்கள் விரிவடைந்துவரும் நிலையில், குறைந்தபட்ச மக்களாட்சிக் கூறுகளை நிலை நிறுத்துவதற்கே உலகத்தில் பல நாடுகளில் சவாலாக உள்ளது. இதில் ஒன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும் இந்தியச் சூழலுக்கு. அரசாங்கத்தை ஜனநாயகப்படுத்துதல் என்பது, எல்லா அரசு நிறுவனங்களிலும் மக்களாட்சிக்கான நியதிகளையும் கூறுகளையும் நடைமுறைப்படுத்தலாகும். இன்றுவரை அதுதான் நமக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. பிரபுத்துவச் சிந்தனையும், ஆதிக்கச் சிந்தனையும் தான் நம் அரசு நிறுவனங்களில் இன்றுவரை பார்க்க முடி கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள், நம் பிரதிநிதி கள், அரசாங்க அலுவலர்கள், நம் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்றவர்கள். ஆனால் இவர்கள் அரசுக் கட்டமைப்புக் குள் சென்றவுடன் இவர்களில் மனோபாவமும், சிந்தனை யும், நடத்தையும் ஆதிக்க மனோபாவத்தைக் காட்டுகிறதே யன்றி மக்களின் சேவைக்காக வந்தவர்கள் என்ற உணர்வற்று செயல்படுவதுதான் இந்த மக்களாட்சி விரி வாக்கத்திற்குத் தடையாக இருப்பது.
தூரத்தில் நிற்க வைத்து...
மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுக ளுக்குப் பின்னும் நம் அரசாங்க அமைப்புக்களில், கல்வி நிலையங்களில் மக்களாட்சிப் பண்புகளைப் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் வெள்ளையர்கள் விட்டுச் சென்ற நிறுவனங்களை நாம் பிடித்துக் கொண்டு, மக்களை அரவணைப்பதற்குப் பதில் தூரத்தில் நிற்க வைத்து பிரபுத்துவ மனோபாவத்தில் மக்களை மிரட்டுவதற்கு பழகி விட்டோம். அரசாங்கத்தையும் சமூகத்தையும் ஜனநாயகப் படுத்துவதில் கல்வி நிறுவனங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. ஆனால் நம் கல்வி நிறுவனங்களே ஆதிக்க மனோ பாவத்திலும் பிரபுத்துவ மனோபாவத்திலும் தான் செயல்பட்டு எதேச்சதிகாரக் கலாச்சாரத்தை உருவாக்கிச் செயல்பட்டு வருகின்றன. ஆக நம் அரசாங்கமும், கல்வி நிறுவ னங்களும் மக்களாட்சிக்கான அமைப்புக்களை உருவாக்குகின்றதே தவிர, அவைகளை ஜனநாயகப்படுத்த முடியவில்லை. இதற்கு மிக முக்கியக் காரணங்கள் நம் சமூகத்தில் இருக்கின்றன. மக்களாட்சி விரிவடைந்து நல்ல பலன்களைத் தந்த நாடுகளை ஆராய்ந்து பார்க்கும்போது நமக்குத் தெரிகின்ற உண்மை என்னவென்றால், சமூ கத்தில் மக்களாட்சிக்கு எதிராக உள்ள காரணிகளை அர சாங்கச் செயல்பாடுகளின் மூலமும், அரசியல் கட்சிகளின் மூலமும், சமூக இயக்கங்களின் மூலமும், கல்வி நிலையங்க ளின் மூலமும் களைந்தெடுக்க வேண்டும். நம் நாட்டில் மக்களாட்சிக்கு எதிரான காரணிகளான எல்லையில்லா ஏற்றத்தாழ்வுகள், சாதிய உயர்வு தாழ்வுகள் ஆணாதிக்கம், தீண்டாமை, வறுமை, ஒதுக்குதல், ஒடுக்குதல், பிரபுத்துவ மற்றும் ஆதிக்க மனோபாவம் அனைத்தை யும் களைவதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றி ணைந்து செயல்படுவதன் மூலமும்தான் நம் அரசாங்கத்தை யும் சமூகத்தையும் ஜனநாயகப்படுத்த முடியும். எனவே இந்தியா பொருளாதார ஜனநாயகத்திற்கும், சமூக ஜனநா யகத்திற்கும் மிகப்பெரிய அளவில் அனைவரும் ஒருங்கி ணைந்து செயல்பட வேண்டும். இதைத்தான் நம் அரசியல் சாசனச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்திய அரசாங்கத் திற்கும், இந்திய அரசியல் கட்சிகளுக்கும், இந்திய சமூகங்க ளுக்கும் வேண்டுகோளாக வைத்தனர். இருந்தபோதிலும் இந்தக் குறிக்கோளை நம்மால் அடைய முடியவில்லை.
சோக வரலாறு
ஆனாலும் இந்தியா ஒரு நல்ல மக்களாட்சி நாடு என்பதை எந்த நாடும் மறுக்கவில்லை. ஏனென்றால் அது ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்திவிடுகிறது. அதில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுகின்றது. வெற்றி பெற்றவர் ஆட்சியைப் பிடிக்கின்றார்கள். தோற்றவர்கள் ஆட்சியை வெற்றி பெற்றவர்களிடம் விட்டுவிடுகின்றனர். இதுவே நல்ல செயல்பாடாக மக்களாட்சி நிபுணர்களுக்குத் தெரிகிறது. இதில் கவனத்தில் நாம் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. மக்கள் தங்களால் ஓர் ஆட்சியை மாற்றமுடியும் என்று நம்புவதும், மாற்றுவதும், மக்கள் இந்த அரசின் மீது வைக்கின்ற நம்பிக்கையும்தான் இந்த மக்களாட்சிக்கு அடிப் படைகள். ஊழல் பெருமளவு நடந்தபோதும் மக்கள் இந்த அமைப்புக்கள்மீது வைத்த நம்பிக்கையை இழக்கவில்லை. இந்திய சமூகத்திடம் பரவிக்கிடந்த மக்களாட்சிக்கு எதிரான காரணிகளை இந்த 78 ஆண்டுகால ஜனநாயகமாக்கலில் மாற்ற முடியவில்லை என்பதுதான் ஒரு சோக வரலாறு. ஏனென்றால் இந்தக் காரணிகளையே வைத்து இத்தனை யாண்டு காலமும் அரசியல் கட்சிகள் அரசியல் செய்ததன் விளைவு பெரு மாற்றங்களை உருவாக்க முடியாமல் தோல்வி யைத் தழுவி நிற்கின்றன நம் அரசியல் கட்சிகள். அரசியல் கட்சிகள் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதன் அடையாளம்தான் வாக்குகளை சந்தைப்படுத்தி விலை கொடுத்து அரசியல் கட்சிகள் வாங்க வேண்டிய சூழ லுக்குத் தள்ளப்பட்டுள்ளன. கொள்கைகள் கோட்பாடுகளை முன் வைத்து வாக்குகளைப் பெற இயலாமல் நலத்திட்ட உதவிகளை எனச்சொல்லி கவர்ச்சித் திட்டங்களை போட்டி போட்டு அறிவித்து, மேம்பாட்டு அரசியலை புறக்கணித்து செயல்பட்டதன் விளைவு, ஒரு நிலையில் இதற்கு மேலும் கவர்ச்சித் திட்டங்களை அறிவிக்க முடியாது என்ற சூழலில் சிக்கிக்கொண்டன அரசியல் கட்சிகள். இந்தச் சூழலில் செய்ய வேண்டியது என்ன என்று நாம் ஆலோசிக்க வேண்டும்.
ஜனநாயகப்படுத்த...
முதலில் அரசியல் கட்சிகள் தங்களை ஜனநாயகப் படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகள் தேர்தலை கட்சிக்குள் நடத்திட வேண்டும். யாரும், எந்தப் பதவியையும் கட்சிகளில் இரண்டு முறைக்கு மேல் வகிக்கக் கூடாது, கட்சித் தேர்தல்களை தனித்துவமான ஒரு நிறுவனம் நடத்திட வேண்டும், கட்சிக்குள் எதேச்சதிகாரப் போக்கை தலைவர்கள் கடைப்பிடிக்காமல் விவாதத்தின் அடிப்படை யிலும், தரவுகளின் அடிப்படையிலும், உண்மையின் அடிப் படையிலும் அமைப்புக்களில் முடிவுகள் எடுக்கும் ஒரு கலாச்சாரத்தைக் கொண்டுவர வேண்டும். கல்வி நிலையங்க ளும், சமூக அமைப்புக்களும் சமூகத்தை ஜனநாயகப்படுத்த முயல வேண்டும். அரசாங்கம் தன் செயல்பாடுகள் மூலம் பொருளாதார ஜனநாயகத்தை உருவாக்க முனைய வேண்டும். அரசியல் கட்சிகள் கடந்தகால சாதிய, மதவாத அரசியலை கைவிட்டு மேம்பாட்டு அரசியலை முன்னி லைப்படுத்த முனைய வேண்டும். இதற்கான மனோ பாவத்தை உருவாக்கக்கூடிய புதிய தலைவர்கள் எல்லா தளங்களிலும் இந்தியாவிற்குத் தேவை. அந்தத் தலைமையின் கீழ் அரசாங்கங்களை ஜன நாயகப்படுத்தவும், நிறுவனங்களை அமைப்புக்களை ஜனநாயகப்படுத்தவும், சமுதாயத்தை ஜனநாயகப்படுத்தவும் ஒரு மாபெரும் இயக்கம் உருவாக வேண்டும். அப்படி உரு வாக்கப்பட்டால்தான் ஜனநாயகம் என்பது ஒரு கலாச்சா ரமாக மாறும். எனவே மக்களாட்சியின் விரிவாக்கத்திற்கு ஒரு மக்கள் இயக்கம் உருவாக வேண்டும்.